Children should be brought up with the grace of family deities – Dhanush | குலதெய்வங்களின் அருளுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்

சென்னை,
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.
‘இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு சென்னை நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய தனுஷ், “இட்லி கடை திரைப்படத்தின் கதை என் பால்யத்தில் நடந்தவைதான். வறுமையில் வயலில் வேலைசெய்து இட்லி சாப்பிட்டவர்களுத்தான் அதன் அருமை தெரியும். நான் காசு கிடைக்காமல் இட்லிக்காக ஏங்கியிருக்கிறேன். நம் அப்பா, தாத்தன், பாட்டன், பூட்டன் வாழ்ந்த கதையெல்லாம் காற்றோடு காற்றாக போய்விடக்கூடாது. பூர்விகம்தான் நம் அடையாளம். நீங்கள் குலதெய்வ வழிபாட்டை விடக்கூடாது. நம் பிள்ளைகளைக் குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்று நாமெல்லாம் எப்படி, எங்கிருந்து வந்தோம் என்பதை சொல்லிக்கொடுத்து குலதெய்வ அருளுடன் அவர்களை வளர்க்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.