I may even direct Dhanush’s next film – “Lubber Pandhu” director | தனுஷின் அடுத்த படத்தை நான் கூட இயக்கலாம்

சென்னை,
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.
‘இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் “என்னுடைய அடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இடம் பார்க்க இங்கு வந்தேன். தனுஷ் சாரின் அடுத்த படத்தை நான் கூட இயக்கலாம். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம். இவை அனைத்தும் வதந்தியாக கூட இருக்கலாம்” என நகைச்சுவையாக கூறினார்.
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தவர் தமிழரசன் பச்சமுத்து. இவர் தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளார். நேர்த்தியான இயக்கத்தின் மூலம் லப்பர் பந்து திரைப்படத்தை இயக்கி அனைவரையும் ரசிக்க வைத்தார். இதற்கிடையில், தமிழரசன் பச்சமுத்து அடுத்ததாக என்ன படம் இயக்கப் போகிறார்? யாரை வைத்து இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்து வருகிறது.