11 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி ஆகும் பிரபல நடிகை

தமிழில் ‘ராஜாராணி’ படத்தில் நடித்து பிரபலமானவர் நஸ்ரியா. “நய்யாண்டி, நேரம், வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா” ஆகிய படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நஸ்ரியா கடைசியாக தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக அண்டே ‘சுந்தரனிகி’ என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு அவர் நடிக்கவில்லை.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் சூக்சுமதர்ஷினி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடிக்கும் புதிய படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனிடையே, தமிழில் அவர் ஒரு வெப் தொடர் நடித்து வருவதாகவும் பின்பு சமீபத்தில் சூர்யாவுடன் ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகை நஸ்ரியா தமிழில் நடிக்கும் வெப் தொடர் சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘டி ஸ்டூடியோஸ்’ தயாரிப்பில் சூர்யபிரதாப் இயக்கத்தில் ‘தி மெட்ராஸ் மிஸ்ட்ரி – பால் ஆப் ஏ சூப்பர்ஸ்டார்’ எனும் தலைப்பில் உருவாகும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நஸ்ரியா நடித்து வருகிறார். இவரைத் தவிர்த்து நட்டி என்கிற நடராஜ், சாந்தனு பாக்கியராஜ், நாசர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் ஏ.எல்.விஜய் இத்தொடருக்கு ஷோ ரன்னராக இருக்கிறார். இத்தொடரின் கதை இந்தியாவையே உலுக்கிய லட்சுமி காந்தன் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை நஸ்ரியா தமிழில் நேரடியாக கடைசியாக திருமணம் என்னும் நிக்காஹ் எனும் படத்தில் நடித்திருந்தார். 11 வருடங்களுக்கு பிறகு அவர் தமிழில் நேரடியாக நடிக்க வந்திருப்பதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.