பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 21-ந்தேதி சென்னை தேனாம் பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்பட சுமார் 3000 பேர் பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.
காலை 8.30 மணிக்கு செயற்குழு கூட்டமும், இதை தொடர்ந்து பொதுக்குழு கூட்டமும் நடக்கிறது. நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் புதிய கட்டிட திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் நடிகர் சங்க தேர்தல் வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
நடிகர் சங்க சட்டதிட்டத்தின்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவுகள் சில வழக்கு காரணங்களினால் 2022-ல் வெளியானது. அதில் நாசர் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று சங்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களது பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் சங்க கட்டிட பணிகள் முடியும் வரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்போதுள்ள நிர்வாகிகள் தொடரலாம் என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து இப்போது இருக்கும் நிர்வாகிகளே சங்கத்தை வழி நடத்தி வருகின்றனர். பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சங்க தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து வழக்கை வருகிற 15-ந்தேதி தள்ளி வைத்தார்.
இது தொடர்பாகவும் பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ரஜினி திரையுலகில் 50 ஆண்டு பொன்விழா, கமல்ஹாசன் மேல்சபை எம்.பி. ஆனதையொட்டி இருவருக்கும் பாராட்டு விழா நடத்தவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தபட இருக்கிறது. புதிய கட்டிட திறப்பு விழா, சங்க தேர்தல் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் என பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.