மூகாம்பிகை கோவிலுக்கு வைர கிரீடங்கள், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இளையராஜா

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது. சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார். இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா, தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 13-ந் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த விழா நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த பாராட்டு விழா நடக்கிறது. இதில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்கு உட்பட்ட கொல்லூரில் தாய் மூகாம்பிகை கோவில் உள்ளது. சக்தி பீட வரிசையில் 3வது பீடமாக விளங்கும் இது, அன்னை பார்வதி தேவிக்காக அமைக்கப்பட்ட ஒரே கோவிலாகக் கருதப்படுகிறது. இங்கே அன்னை பார்வதி தாய் மூகாம்பிகையாக வழிபடப்படுகிறாள். இளையராஜா, தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர் ஆவார்.
தனது சினிமா பயணம் 50 அரை நூற்றாண்டை எட்டியுள்ளதை ஒட்டி கொல்லூர் மூகாம்பிகா தேவிக்கும் வீரபத்ர சுவாமிக்கும் எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாள் காணிக்கையாக செலுத்தினார் இளையராஜா. இன்று காலை கொல்லூருக்கு வந்த இளையராஜா கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்னர், நகைகளை காணிக்கையாக செலுத்தினார். நகைகளைச் சமர்ப்பிக்கும் முன், கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்களுடன் இளையராஜா ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அப்போது, பக்திப் பரவசத்தில் தன் வாழ்வில் அன்னையின் அருளால் நிகழ்ந்த அற்புதங்களை நினைவுகூர்ந்து நெகிழ்ந்து போனார். மூகாம்பிகை அம்மனால் தன் வாழ்வில் அசாதாரண முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்கொடைகளை வழங்கிய இளையராஜாவுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பிரபல இசையமைப்பாளரிடமிருந்து கோயிலுக்கு இவ்வளவு பெரிய நன்கொடை கிடைத்தது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் நகை சமர்ப்பணம் மட்டுமல்ல, ஒரு மகத்தான கலைஞர் தனது இஷ்ட தெய்வத்தின் மீது கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கை மற்றும் பக்திக்குச் சான்றாகும்.