ரூ.60 கோடி மோசடி வழக்கு- ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு போலீசார் சம்மன்

மும்பை,
மும்பை ஜூகு பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் கோத்தாரி(வயது60). இவரிடம் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா தங்களின் `பெஸ்ட் டீல் டி.வி.’ சேனலில் முதலீடு செய்யுமாறு ரூ.60 கோடியே 48 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வாங்கிய பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதுகுறித்து தொழில் அதிபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடந்த மாதம் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு வழக்கு மீதான விசாரணை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
கடந்த வாரம் ரூ.60 கோடி மோசடி வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் `லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்து இருந்தனர். இந்தநிலையில் மோசடி வழக்கு விசாரணையில் ஆஜராக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். வருகிற 15-ந் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.