கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

பிரபல கவிஞர் பூவை செங்குட்டுவன் உடல் நலக்குறைவினால் காலமானார். இவருக்கு வயது 90. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் சென்னை பெரம்பலூரில் மரணம் அடைந்தார். இவர் ஏராளமான திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பதித்தவர்.
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் ‘முருகவேல் காந்தி’. சேரன் செங்குட்டுவன் என்ற நாடகத்தைப் பார்த்து தனது பெயரை செங்குட்டுவன் என மாற்றிக் கொண்டார். ஊர் பெயரையும் முன்னால் இணைத்து… பூவை செங்குட்டுவன் என்ற பெயர் கொண்டார். 1967 முதல் பாடல்கள் எழுதி வந்தார். பெரும்பாலும் பக்தி பாடல்கள் எழுவதில் இவர் வல்லவர். ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்கள், 4000க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.
நான் உங்கள் வீட்டு பிள்ளை, தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், இறைவன் படைத்த உலகை போன்ற பல காலத்தால் அழியாத புகழ்பெற்ற பாடல்களை இவர் எழுதியுள்ளார்.
சென்னை, பெரம்பூர், ரமணா நகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.