''கல்யாணி உண்மையிலேயே லேடி சூப்பர் ஹீரோதான்''- துல்கர் சல்மான் புகழாரம்

சென்னை,
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து டொமினிக் அருண் இயக்கி, கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‘லோகா’ படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் குவித்தது. படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.
இதில் நடிகர் துல்கர் சல்மான் கலந்துகொண்டு பேசும்போது, ”தமிழகத்தின் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருக்கிறது. என் படங்களுக்கு இங்கே ஆதரவு இருக்கும் என்பதை குருட்டுத்தனமாக நம்புவேன். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. ‘லோகா’ படத்தை 5 பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான விவாதங்கள் நடந்து வருகிறது. என்னதான் போராடினாலும், ஒரு வருடத்துக்கு 3 படங்கள் தான் நடிக்கமுடியும். எனவே என் ஆசைக்கு தீனி போடும் விதமாகவே தயாரிப்பாளராக மாறினேன்.
‘லோகா’ படத்தில் கல்யாணி நான் நினைத்ததை விட நடிப்பில் அசத்தி விட்டார். ‘பாக்சிங்’ உள்ளிட்ட நிறைய பயிற்சிகளை கற்றார். உண்மையிலேயே நிஜத்திலேயே அவர் ஒரு லேடி சூப்பர் ஹீரோ தான்”, என்றார்.
கல்யாணி பிரியதர்ஷன் பேசும்போது, ”சிறிய வயதில் ரத்தம் குடிக்கும் மோகினி கதாபாத்திரத்தில் நடித்துவிட்டேன். இதனால் என் பாய் பிரண்டுகள் பயப்பட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்”, என்றார்.