“தடை அதை உடை” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

சென்னை,
காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்துள்ள படம் ‘தடை அதை உடை’. இந்த படத்தில் அங்காடித்தெரு படத்தின் மூலம் நடிகரான மகேஷ், குணா பாபு, பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை, பாக்கியம் கவுதமி, சுபா, சூரியப்ரதாபன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார்.
இப்படம் பற்றி இயக்குனர் அறிவழகன் முருகேசன் கூறியிருப்பதாவது:- “1990-களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருட காலமாக கொத்தடிமையாக இருந்த ஒருவன் தன்னந்தனியாக போராடி தன் வம்சத்தை கல்விக்கு திருப்பிய உண்மைக்கதையையும், சமகாலத்தில் சோசியல் மீடியா, கல்வி மற்றும் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யும் மாற்றங்கள் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் மிக சுவாரஸ்யமாக சொல்லும் திரைப்படம் இது. அத்துடன் சேர்ந்து தஞ்சையின் பண்பாடு, மக்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் சொல்லாத வகையிலும், நெற்களஞ்சிய மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையிலும் சொல்லியிருக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.