நாகார்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்

சென்னை,
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நட்சத்திரங்களின் பட்டியலில் தற்போது நடிகர் நாகார்ஜுனாவும் இணைய உள்ளார். தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே இந்த அரிதான சாதனையை கொண்டுள்ளனர். குபேரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் நாகார்ஜுனா ஜப்பானில் பெரும் புகழைப் பெற்றுள்ளார். அங்குள்ள சினிமா ரசிகர்கள் இவரை ‘நாக்-சமா’ என்று அன்புடன் அழைக்கின்றனர். சமீபத்தில் ‘கூலி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்த படம், ‘நித்தம் ஒரு வானம்’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை ரா.கார்த்திக் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில், நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது. இதனை நாகார்ஜுனா பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார்.இது குறித்து கூறிய அவர், “தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் என்னுடைய 100-வது படம் உருவாகிறது. இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். ‘கூலி’ தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது. “இது ஆக்ஷன், பேமிலி சென்டிமென்ட், டிராமா கலந்து உருவாகும் படம். இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் நாகார்ஜுனா.
இந்தப் படம் குறித்த அறிவிப்பு நாகார்ஜுனாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிரது.