சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி,
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியானது. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 171 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
திரை உலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, இருமுறை பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். இந்த நிலையில், சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“சினிமா உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்துக்கு வாழ்த்துகள். அவரது பயணம் ஒரு சிறப்புமிக்க அனுபவம். அவரது மாறுபட்ட வேடங்கள் தலைமுறை தலைமுறையாக மக்கள் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றிகளை பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.