"கூலி" படத்திற்கு போலி டிக்கெட்டுகள் விற்பனை?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் நாளை (14ம் தேதி) வெளியாகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள கூலி திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளை திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பயன்படுத்தி டிக்கெட்டை ரூ.500 முதல் ரூ.3,000 வரை விற்கின்றனர். மேலும், போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு முன்பாக முழுமையாக சரிபார்த்து வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.