"ரெட் பிளவர்" திரை விமர்சனம்

சென்னை,
2047-ம் ஆண்டு நடக்கும் கதை. மூன்றாவது உலகப் போர் முடிவடைந்து, உலக நாடுகள் பலவற்றை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மால்கம் என்ற ராணுவ படை, இந்தியாவையும் குறிவைக்கிறது.
இந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, சென்னை உள்ளிட்டமுக்கிய நகரங்களில் பல நாச வேலைகளை அரங்கேற்ற திட்டமிடுகிறது. இந்த சதி வேலைகளை தகர்த்து, அந்த ராணுவ படையை முறியடிக்க உளவுத்துறை அதிகாரியான விக்னேஷ் மூலம், ‘ஆபரேஷன் ரெட் பிளவர்’ என்ற திட்டத்தை கையில் எடுக்கிறது இந்திய ராணுவம்.
அதன்படி, களத்தில் இறங்கும் விக்னேஷ், இந்தியாவை ஆபத்தில் இருந்து காப்பாற்றினாரா? சதிவேலைகளை முறியடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.
கதாநாயகன் மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் வருகிறார் விக்னேஷ். கதாநாயகனாக பெண்களை காப்பாற்றுகிறார். வில்லனாக பெண்களை வேட்டையாடுகிறார். வில்லனாகத்தான் ‘நன்றாக’ வாழ்ந்திருக்கிறார். கவர்ச்சியில் கிறங்கடிக்கும் மணிஷா ஜஸ்னானி, முழுமையான ஒத்துழைப்பை வாரி கொடுத்திருக்கிறார். அல்மஸ் அதம், ஷாம் ஆகியோரும் கவர்ச்சி பதுமைகளாகவே உலா வருகிறார்கள்.
பிரதமராக ஒய்.ஜி.மகேந்திரன், ராணுவ தளபதியாக நாசர், உலகை கட்டுப்படுத்த துடிக்கும் சர்வாதிகாரியாக தலைவாசல் விஜய் ஆகியோரின் அனுபவ நடிப்பு கவனம் ஈர்க்கிறது. இதர கதாபாத்திரங்கள் மனதில் ஒட்டவில்லை.
ஒளிப்பதிவில் தேவசூர்யா முடிந்ததை செய்துள்ளார். சந்தோஷ் ராம் இசை ஓகே ரகம். எதிர்கால இந்தியா பற்றிய கற்பனை ரசிக்க வைத்தாலும், பெண்களை போகப்பொருளாக மட்டுமே காண்பிப்பது சரியா? கொலை, கற்பழிப்பு காட்சிகளை குறைத்திருக்கலாமே?.
வியக்க வைக்கும் கற்பனைகளை மனதில் வைத்து காவியம் படைக்க முயற்சித்துள்ளார், இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். முயற்சி முழுமையடைந்திருக்கலாம்.
ரெட் பிளவர் – காகிதப்பூ.