ராமேசுவரம் கோவிலில் ‘கூலி’ திரைப்படக்குழு தரிசனம்

ராமேசுவரம்,
ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) உலகளவில் வெளியாகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சுருதிஹாசன் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தலைமையில் படக்குழுவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அக்னி தீர்த்த கடலிலும், கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினர்.
அதனை தொடர்ந்து விநாயகர், ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். லோகேஷ் கனகராஜ் உடன் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.
கோவிலில் இருந்து வெளியே வந்தபின், கிழக்கு வாசல் பகுதியில் உள்ள கடையில் சங்கு ஒன்றை லோகேஷ் கனகராஜ் வாங்கினார். பின்னர் இப்படம் குறித்து அவர் கூறுகையில், “கூலி திரைப்படம் தரமானதாகவும், சிறந்த பொழுதுப்போக்கு அம்சங்கள் கொண்ட படமாகவும் இருக்கும். படத்தை அனைவரும் பாருங்கள்” என்றார்.