“காத்துவாக்குல ஒரு காதல்” திரைப்பட விமர்சனம்

சென்னை,
மாஸ் ரவியும், லட்சுமி பிரியாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். இதற்கிடையில் மாஸ் ரவி தொலைந்து போவது போல லட்சுமி பிரியா கனவு காண்கிறார். அந்த கனவும் பலித்து விடுகிறது. அவரை தேடி அலையும் லட்சுமி பிரியா, மாஸ் ரவி ரவுடி கும்பலில் ஒருவராக வலம் வருவதை கண்டு அதிர்ந்து போகிறார். தன்னை தெரியாதது போல நடந்து கொள்ளும் மாஸ் ரவி மீது குழப்பம் கொள்கிறார். ரவுடியாக வலம் வரும் மாஸ் ரவியை, பல்லவி என்ற பெண் காதலித்து வருகிறார்.
மாஸ் ரவியின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்? அவர் ஒரு ஆளா அல்லது இரட்டை பிறவிகளா? யாருடைய காதல் வெற்றி பெற்றது? என்ற பல்வேறு கேள்விகளுக்கான முடிச்சுகளை அவிழ்க்கிறது மீதி கதை.
ஒரு பக்கம் அமைதி, இன்னொரு பக்கம் அதிரடி என கலக்கி இருக்கிறார், மாஸ் ரவி. காதல் காட்சிகளில் தான் நடிப்பு ஒட்டவில்லை. கதாநாயகிகளாக லட்சுமி பிரியா, பல்லவி என இருவரும் அசத்தினாலும், சிரித்த முகமாக வரும் லட்சுமி பிரியா அதில் ‘ஸ்கோர்’ செய்கிறார்.
வில்லன்களாக சூப்பர் சுப்பராயன், சாய் தீனா மிரட்டினாலும், பல காட்சிகளில் பேசிப்பேசி வெறுப்பேற்றுகிறார்கள். ஆதித்யா பாஸ்கர், தங்கதுரை, கல்லூரி வினோத், பாஸ்கர், பவர் ஸ்டார் சீனிவாசன், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி நடிப்பும் பரவாயில்லை.
ராஜதுரை, சுபாஷ் மணியனின் ஒளிப்பதிவும், ஜி.கே.வி.யின் இசையும் சுமார். அதிரடி காட்சிகள் படத்தின் பலம். முதல் பாதி எதை நோக்கி செல்கிறது? என்ற குழப்பம் ஏற்படுகிறது. திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார்கள்.
காதலும், ரவுடிகளின் மோதலுமாக படத்தை எடுத்துள்ளார், மாஸ் ரவி. இயக்குனரே, நடிகர் என்றால் யாரும் குறை சொல்ல முடியாது என்று நினைத்துவிட்டாரோ…
காத்துவாக்குல ஒரு காதல் – வறட்சி.