சின்னத்திரை நடிகர் சங்க தலைவரானார் பரத்

சென்னை,
சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக பெப்சி அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் உமா சங்கர் பாபு தேர்தலை நடத்தினார்.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடந்தது. இந்த தேர்தலில் சீரியல் நடிகர், நடிகைகள் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் 936 வாக்குகள் பதிவாகின.
இதில் 491 வாக்குகள் பெற்று நடிகர் பரத் தலைவராக தேர்வாகியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுவரையில் சங்க நிர்வாகத்தில் இளம் வயதில் தலைவரானது இவர்தான் என்கிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் பரத், பேட்டி ஒன்றில், “முதல் கட்டமாக வேலை வாய்ப்பு தொடர்பான கோரிக்கையை நிறைவேற்றுவேன். இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எனக்கு பொறுப்பாக தெரியவில்லை. பயமாக இருக்கிறது. பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன்” என்று பேசியுள்ளார்.