“Kingdom”: Court orders police to provide security to cinemas | “கிங்டம்” :திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

சென்னை,
தமிழ்நாட்டில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழ் ஈழ பிரச்சினை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்ததை அடுத்து பாதுகாப்பு கோரி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ புரொடெக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, சென்சார் போர்டு அனுமதித்த திரைப்படத்தை வேறு எந்த வகையிலும் தடுக்க முடியாது எனவும் படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என பிரச்சாரம் வேண்டுமானால் செய்யலாம் எனவும் கூறினார். மேலும், கிங்டம் திரைப்பட விவகாரத்தில் ஜனநாயக ரீதியாக போராட வேண்டும் என்று கூறி பட வெளியீட்டு நிறுவனத்தின் மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணையின்போது “சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடப்படுவதை யாரும் தடுக்க முடியாது. அதே நேரத்தில் உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு உரிமை உள்ளது” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.‘கிங்டம்’ படம் திரையிட இடையூறு செய்தால், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
படம் திரையிடுவதை எந்த வகையிலும் தடுக்கவில்லை என நாதக தரப்பு வழக்கறிஞர் உறுதியளித்துள்ளார்.