'வடம்' படம் ஜல்லிக்கட்டின் பெருமையை அறிந்து கொள்ளும் வகையில் அமையும்: நடிகர் விமல்

கோவை,
நடிகர் விமல் புதிதாக ‘வடம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழாவையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் ராஜசேகர், இயக்குனர் கேந்திரன், நடிகர் விமல், நடிகை சங்கீதா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கில் படத்தின் தொடக்க விழா நடந்தது.
இதையடுத்து நடிகர் விமல் நிருபர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டியில் 2 வகை உண்டு. ஒன்று மாடுகளை விரட்டிச்சென்று பிடிப்பது, மற்றொன்று கயிறு கட்டி சுற்றி நின்று பிடிப்பது. 2-வது வகை ஜல்லிக்கட்டுக்கு வடம் என்றும் பெயர் உண்டு. இதனை மையமாக கொண்டே ‘வடம்’ படம் தயாராக உள்ளது. இது நிச்சயம் ஜல்லிக்கட்டின் பெருமையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமையும் என எதிர்பார்க்கிறோம். இந்த படம் நம்பும் வகையிலான ஆக் ஷன் கலந்ததாகவும் இருக்கும் என்றார்.