பிரபல மலையாள நடிகர் ஹோட்டல் அறையில் சடலமாக கண்டெடுப்பு

கொச்சி,
பிரபல மலையாள திரைப்பட நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கலாபவன் நவாஸ் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கபட்டுள்ளார். 51 வயதான கலாபவன் நவாஸ், மிமிக்ரி கலைஞர், பின்னணிப் பாடகர், நடிகர் என பன்முகத்திறன் கொண்டவர். 1995 ஆம் ஆண்டு சைதன்யம் என்கிற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான அவர் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானார். மிமிக்ஸ் ஆக்ஷன் 500 ஹிட்லர் பிரதர்ஸ் ஜூனியர் மாண்ட்ரேக், தில்லானா தில்லானா உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இன்றி கலாபவன் நவாஸ் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில்தான், பிரகம்பனம் என்ற திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக கொச்சி அருகே தனியார் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். நேற்று மாலை படக்குழு வெளியே செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் நீண்ட நேரமாகியும் நவாஸ் தனது அறையை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த சக படக்குழுவினர், அவரது அறையை திறந்து பார்த்த போது, பேச்சுமூச்சின்றி கிடந்துள்ளார்.
இதன்பின் ஹோட்டல் ஊழியர்கள் போலீஸுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் நவாஸை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டு கலாபவன் நவாஸ் மரணம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.நவாஸின் மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.