71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. விருது வென்ற படங்கள் முழு விவரம்

71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. விருது வென்ற படங்கள் முழு விவரம்


புதுடெல்லி,

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகினறன. இந்திய சினிமாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த கலை பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருதுகள் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்

அந்தவகையில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. 2023-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன.

இந்த தேர்வு பட்டியலில் 332 படங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எதிர்பார்த்தது போலவே சிறந்த திரைப்படமாக ’12த் பெயில்’ தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த விக்ராந்த் மாசிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.

மேலும் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான ‘ஜவான்’ படத்தில் நடித்த ஷாருக்கானுக்கும் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. 35 ஆண்டுகளாக சினிமாவில் கோலாச்சும் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

‘திருமதி சாட்டர்ஜி மற்றும் நார்வே’ படத்தில் நடித்த ராணி முகர்ஜிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆஷிமா சிப்பர் இயக்கிய ‘திருமதி சாட்டர்ஜி மற்றும் நார்வே’ படம் குழந்தைகள் கடத்தல் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

விது வினோத் சோப்ராவின் ’12த் பெயில்’ படம் மத்திய அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியின் உறுதியான முயற்சியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இதுவும் உண்மை கதையை அடிப்படையாக கொண்டது.

சிறந்த தமிழ் படமாக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி எம்.எஸ்.பாஸ்கர், ஹரிஷ் கல்யாண், இந்துஜா ஆகியோர் நடித்த ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டது. இதில் எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த படத்தில் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது ராம்குமார் பாலகிருஷ்ணணுக்கு அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் ‘பார்க்கிங்’ படத்துக்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ‘பார்க்கிங்’ போன்ற சாதாரண பிரச்சினைகள்தான் மனித மனங்களின் அடி ஆழத்தில் இருக்கும் அகம்பாவத்தையும், சிறுமைகளையும் தோண்டி எடுத்து விஸ்வரூபமாக வெளிப்பட வைக்கின்றன என்பதை கச்சிதமாக உணர்த்தியிருப்பார் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

‘உள்ளொழுக்கு’ சிறந்த மலையாள படமாக தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

‘வாத்தி’ படத்தில் இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. வெங்கி அட்லுரி இயக்கிய ‘வாத்தி’ திரைப்படத்தில் தனுஷ்-சம்யுக்தா நடித்திருந்தனர்.

கலை மற்றும் கலாசார பிரிவில் சிறந்த குறும் படமாக தமிழில் வெளியான ‘லிட்டில் விங்ஸ்’ தேர்வானது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதும் இந்த குறும் படத்தில் பணியாற்றிய சரவண மருது சவுந்தரபாண்டின், மீனாட்சி சோமன் அறிவிக்கப்பட்டனர். இதேபோல ஆணவப்படப்பிரில் ‘தி டைம்லெஸ் தமிழ்நாடு’ தேர்வானது.

‘தி கேரளா ஸ்டோரி’ என்ற மலையாள மொழி படத்தை இயக்கிய சுதீப்தோ சென்னுக்கு சிறந்த திரைப்பட இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த ஒலி அமைப்புக்கான தேசிய விருது ‘அனிமல்’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தயாரிப்புக்கான தேசிய விருதை மலையாள படமான ‘2018’ வென்றுள்ளது. சிறந்த தெலுங்கு திரைப்படத்துக்கான விருதை ‘பஹவந்த் கேசரி’ வென்றுள்ளது.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி விரைவில் விருது வழங்குவார்.

கடந்த ஆண்டு சிறந்த தமிழ்படமாக ‘பொன்னியின் செல்வன்-1’ தேர்வு செய்யப்பட்டு சிறந்த பின்னணி இசை, ஒலிப்பதிவு உள்ளிட்டவைக்காக 4 விருதுகள் அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகராக ‘காந்தாரா’ படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டி, சிறந்த நடிகையாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *