அமெரிக்காவிலுள்ள பாடகர் யேசுதாஸை சந்தித்த ஏ.ஆர்.ரகுமான்

அமெரிக்கா,
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். 8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். அது மட்டுமின்றி மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஒரே நாளில் வெவ்வேறு மொழிகளில் 16 புதிய பாடல்களைப் பாடி பதிவு செய்ததற்காக உலக சாதனை படைத்துள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் தற்போது ‘தி வொண்டர்மென்ட் டூர்’ நிகழ்ச்சிக்காக வட அமெரிக்காவில் இருக்கிறார். அவரது இசை நிகழ்ச்சி அமெரிக்கா முழுவதும் 15க்கும் மேற்பட்ட நகரங்களில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏ. ஆர். ரகுமான் அங்கு முக்கியமான பிரபலங்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில்கூட ‘ஓப்பன் ஏஐ’-யின் சி.இ.ஒ சாம் ஆல்ட்மேனை சந்தித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘பெர்ப்பிளெக்ஸிட்டி ஏஐ’-யின் சி.இ.ஒ அரவிந்த் ஸ்ரீனிவாசனையும் சந்தித்திருக்கிறார்.
தற்போது பிரபல பின்னணிப் பாடகர் யேசுதாஸை அமெரிக்காவில் உள்ள டல்லாஸில் சந்தித்திருக்கிறார். யேசுதாஸை சந்தித்தது குறித்து ஏ. ஆர். ரகுமான், ” என் குழந்தைப் பருவத்தின் பேவரைட்டான யேசுதாஸ் அவர்களை டல்லாஸில் அவரின் இடத்தில் சந்தித்தேன். அவரது ஆராய்ச்சிப் பணியும், இந்திய பாரம்பரிய இசை மீதான அன்பும் ஆச்சரியமளித்தது” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
ரகுமான் மற்றும் பிற பாடகர்களுடன் யேசுதாஸின் வீட்டிற்குச் சென்ற பாடகி ஸ்வேதா ஜாம்பவான்களுடன் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டு, “டல்லாஸில் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அன்பான காலை ” என்று எழுதியுள்ளார்.