பூஜா ஹெக்டேவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த "டூரிஸ்ட் பேமிலி" கமலேஷ்

சென்னை,
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019-ல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். ஹாரர் – காமெடி ஜானரில் உருவான இந்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ராகவேந்திரா புரடக்சன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘காஞ்சனா 4’ உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இப்படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், பாலிவுட் நடிகை நோரா பதேகியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘காஞ்சனா 4’ படப்பிடிப்பு தளத்தில் பூஜா ஹெக்டேவுடன் எடுத்த புகைப்படங்களை “டூரிஸ்ட் பேமிலி” கமலேஷ் பகிர்ந்துள்ளார். அதில் “‘பீஸ்ட்’ படம் பார்த்ததுல இருந்தே அவங்களை ஒரு தடவையாச்சும் நேரல மீட் பண்ண மாட்டோமானு நினைச்சிட்டிருந்தேன். ஏன்னா, என்ன காரணத்துக்குன்னே தெரியாம அவங்களை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. அதனால எப்ப பார்ப்போம்னு இருந்த சூழல்லதான் இன்ப அதிர்ச்சியா அவங்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. ‘டூரிஸ்ட் பேமிலி’ பத்தி ரொம்பவே பேசிப் பாராட்டினாங்க. என்னுடைய ‘மம்பட்டியான் டான்ஸ்’ அவங்களூக்கு ரொம்பவே பிடிச்சிருந்திச்சாம். அப்படியே என்னுடைய அப்பா அம்மா, படிப்பு. அடுத்த படங்கள்னு எல்லாம் விசாரிச்சாங்க.” என்றார்.