கமல் பற்றி சொன்ன கருத்து வைரலான நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்த விளக்கம்

சென்னை,
கடந்த 2008-ம் ஆண்டு ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் லட்சுமி ராமகிருஷ்ணன். ‘பொய் சொல்ல போறோம்’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘ஈரம்’ ஆகிய படங்களிலும் நடித்து தனது அசாத்திய நடிப்புத்திறன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி பெயர் பெற்றார். கேரளாவைச் சேர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் கடைசியாக இந்த ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடித்திருந்தார். 60 வயதாகும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கமல் குறித்து பேசினார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும் போது, கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகையாக, தான் இருந்ததாகவும், கல்லூரி நாட்களிலிருந்தே அவரை காதலித்து வந்ததாகவும், அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க, அப்போது கமலிடம் தன் மனதில் இருந்த காதலை சொல்ல சென்ற போது , ‘தங்கச்சி’ என கமல் அழைத்ததாக கூறினார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:
நான் 16ஆம் வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18ஆம் வயதில் திருமணம் செய்தேன். 42வது வயதுவரை எனக்கு சினிமா உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. மற்ற பலர்போலவே, நான் நட்சத்திரங்களை ஒரு ரசிகையாகவும், குழந்தைபோன்ற ஆச்சரியத்துடனும் பார்த்தவள்தான்.
45வது வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது, உண்மையிலேயே star-struck ஆகிவிட்டேன். அவர் என்னைப் பார்த்து, “என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்” என்று சொன்னதும், என் நண்பர்கள் நகைச்சுவையாக கலாய்த்தார்கள். இதைத்தான் நான் குக் வித் கோமாளியில் நன்றாக ரசித்து பகிர்ந்தேன். இதைப் தவறாக புரிந்து, செய்தியாக மாற்றி பரப்புவது நியாயமற்றதுமே அல்லாமல், மிகுந்த நாகரிகமற்றதும்கூட” என்று பதிவிட்டுள்ளார்.