GV Prakash posted in support of Kavin who was murdered

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 26). இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இதனிடையே, சொந்த ஊருக்கு சென்ற கவின்குமார் நேற்றுமுன்தினம் நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் காதலியின் சகோதரன் சுர்ஜித் என்பவர் கவின்குமாரை வெட்டிக்கொன்றார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கவின்குமாரை கொலை செய்த சுர்ஜித் போலீசில் சரண் அடைந்தார்.
சுர்ஜித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது அக்காளை கவின்குமார் காதலித்ததாகவும், காதலை கைவிடுமாறு கூறியதாகவும் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து சுர்ஜித்தை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், கவின்குமார் காதலித்த இளம்பெண் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் (எஸ்.ஐ.) சரவணன், கிருஷ்ணகுமாரியின் மகள் என்பது தெரியவந்தது. போலீஸ் தம்பதியின் மகனான சுர்ஜித் தனது அக்காளை காதலித்த கவின்குமாரை கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் “தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்” என எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்துள்ளார்.