இந்தியாவில் ரிலீசாகும் முன்பே அமெரிக்காவில் திரைக்கு வரும் "கூலி" திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இதில் ஆமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திர ராவ், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருப்பதால் பான் இந்தியா அளவில் கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படம் வெளியாக இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கான அமெரிக்கா முன்பதிவு கடந்த வாரம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கூலி படம் ரிலீசாகும் முன்பே அமெரிக்காவில் வெளியாக உள்ளது. அதாவது, அங்கு அமெரிக்க நேரப்படி ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 6.30 மணிக்கே பிரிமியர் காட்சி திரையிடப்பட உள்ளது. அந்த நேரம் இந்திய நேரப்படி ஆகஸ்ட் 14ம் தேதி அதிகாலை 4 மணி என்பது குறிப்பிடத்தக்கது.