நடிகை ரம்யா குறித்து ஆன்லைனில் அவதூறு பதிவுகள் – நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் வலியுறுத்தல் | Defamatory posts about actress Ramya online

பெங்களூரு,
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார். தர்ஷனின் தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகாசாமி ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால் இந்த கொலை நடந்தது குறிப்பிடத்தக்கது. தர்ஷனின் ஜாமீன் மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து தமிழில் ‘குத்து’, ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான திவ்யா ஸ்பந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார். அதாவது, சாதாரண குடிமகனுக்கு சுப்ரீம் கோர்ட்டுதான் நம்பிக்கை அளிக்கும். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு நடிகர் தர்ஷனின் ரசிகர்கள், நடிகை ரம்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சில ரசிகர்கள் நடிகை ரம்யாவுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி வசைபாடினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு வரும் நடிகர் தர்ஷனின் ரசிகர்களை வரவேற்கிறேன். ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது பற்றி உங்கள் கருத்துகளை கூறுங்கள்” என பதிவிட்டார்.
இதையடுத்து அவரை படுமோசமான வார்த்தைகளில் திட்டிய தர்ஷனின் ரசிகர்கள் சிலர், ஆபாசமான தகவலையும் நடிகை ரம்யாவுக்கு எதிராக பதிவிட்டுள்ளனர். அவர்களின் செயல் அத்துமீறியதால் கோபமடைந்த நடிகை ரம்யா, “ரேணுகாசாமி அனுப்பிய செய்திக்கும், தர்ஷனின் ரசிகர்கள் எனக்கு அனுப்பிய செய்திக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதுபோன்றவர்கள் தான் பெண்களை பலாத்காரம் மற்றும் கொலை செய்கிறார்கள்” என்று கூறியதோடு, தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய 11 பேரின் பெயர்களையும் வெளியிட்டார். இதனால் நடிகர் தர்ஷன் ரசிகர்கள், நடிகை ரம்யா இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், நடிகை ரம்யா குறித்து ஆன்லைனில் அவதூறு பதிவுகள் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெங்களூரு காவல்துறையிடம் கர்நாடக மாநில மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பெங்களூரு காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங்கிற்கு மகளிர் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், “முன்னாள் எம்.பி.யும் திரைப்பட நடிகையுமான ரம்யாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான செய்திகள் வெளியிடப்படுவதாக ஒரு புகார் எழுந்துள்ளது. இது பெண்களின் கண்ணியத்தை பாதிக்கிறது. மாநில மகளிர் ஆணையம் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. ஆன்லைனில் பெண்களை குறிவைத்து அவதூறு பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.