கமல் ரசிகனா?… உங்களை இசை வெளியீட்டு விழாவில் பாத்துக்குறேன் – லோகேஷை மிரட்டிய ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆ தேதி வெளியாகிறது.
‘கூலி’ படத்தில் இடம் பெற்றுள்ள சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகின்றன.
பேட்டி ஒன்றில் தான் கமல் ரசிகர் என்பதால் ரஜினி தன்னிடம் சொன்னதை பகிர்ந்துகொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதில் “சின்ன வயதில் இருந்தே நான் கமல் ரசிகன். எங்கள் வீட்டில் என்னை தவிர மற்ற எல்லாரும் ரஜினி ரசிகர்கள். என் அம்மாவிடம் ரஜினி சார் படம் பண்ண போகிறேன் என்று சொன்னதும் சின்ன வயதில் ‘சூப்பர்ஸ்டார் யாருன்னு கேட்டா’ பாட்டு இல்லாமல் நான் சாப்பிடமாட்டேன் என்று சொன்னார். கமலின் சத்யா படம் பார்த்தபின் சினிமா பற்றிய என்னுடைய பார்வை மொத்தமாக மாறியது. கூலி படத்தின் கதையை ரஜினி சாரிடம் சொன்னபோதே பேச்சுவாக்கில் நான் கமல் சார் ரசிகன் என்று சொல்லிவிட்டேன். அப்போது ரஜினி சார் எதுவும் சொல்லவில்லை. டப்பிங் வேலைகள் எல்லாம் முடிந்தபிறகு உதவி இயக்குநர்களிடம் ரஜினி சார் பேசியபோது ஒன்று சொன்னார். ‘நான் ஒரு கமல் ரசிகன் என்று சொல்லிதான் என்கிட்ட லோகேஷ் கதையே சொன்னார். அவரை ‘கூலி’ படத்தோட இசை வெளியீட்டு விழாவில் பாத்துக்குறேன்’ என்று ரஜினி சார் விளையாட்டாக சொன்னார். ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்தால் இன்னொரு நடிகை ரசிக்கக் கூடாது என்றில்லை. கமல் ரசிகனான நான் ரஜினி சாருக்கு படம் பண்ணுவது கூடுதல் பொறுப்புதான். தன்னுடைய ரசிகர் தன்னுடைய நண்பரின் படத்தை இயக்குவதில் தனக்கு பெருமைதான் என கமலே ஒருமுறை மேடையில் சொன்னார்” என லோகேஷ் கனகராஜ் பேசினார்.