"3 பி.எச்.கே" திரைப்பட விமர்சனம்

சென்னை,
தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றும் சரத்குமார், தனது மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீத்தா ரகுநாத் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். 3 படுக்கையறை கொண்ட சொந்த வீடு வாங்கவேண்டும் என்பது சரத்குமாரின் கனவு. இதற்காக கடினமாக உழைத்தாலும், செலவுகளை மீறி சேமிக்க முடியாத வாழ்க்கை போராட்டத்தில் சிக்கி வருந்துகிறார்.
இதையடுத்து தந்தையின் கனவை நிறைவேற்றும் முயற்சியில் சித்தார்த்தும், மீத்தா ரகுநாத்தும் களமிறங்குகிறார்கள். இருவரும் கடினமாக உழைத்து பணம் சேமிக்கிறார்கள். சிரமங்களுக்கிடையே சேமிக்கும் பணம் சந்தர்ப்ப சூழலால் செலவாகி போகிறது. சரத்குமாரின் கனவு நிஜமானதா? அதை சித்தார்த்தும், மீத்தா ரகுநாத்தும் நிறைவேற்றி வைக்க முடிந்ததா? என்பதே மீதி கதை.
சராசரி குடும்ப தலைவனாக வாழ்ந்து காட்டியுள்ள சரத்குமார், அனுபவ நடிப்பை காட்டி அசத்தி விடுகிறார். தோல்வியே கதியாக கிடக்கும் மகனை திட்டவும் முடியாமல், அவனது வேதனையை தாங்கவும் முடியாமல் எதார்த்த நடிப்பை கொட்டி வியக்க வைக்கிறார். ஜாடிக்கு ஏற்ற மூடியாக, சரத்குமாருக்கு இணையாக நடிப்பில் கலக்கி இருக்கிறார் தேவயானி. இருவரது ‘கெமிஸ்ட்ரி’யும் அசத்தல்.
போராட்டமே வாழ்க்கையாக இருக்கும் சித்தார்த்தின் நடிப்பு ‘அடடா’ சொல்லவைக்கிறது. மவுனமாக அவர் அழும் இடங்கள் நேர்த்தியான நடிப்புக்கு சான்று. மீத்தா ரகுநாத்தின் அப்பாவித்தனமான நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. யோகிபாபுவின் அளவான நடிப்பு ரசிக்க வைக்கிறது. சைத்ரா, ரமேஷ் வைத்யா என அத்தனை பேரின் நடிப்பிலும் குறைவில்லை.
தினேஷ் கிருஷ்ணன் – ஜித்தின் ஸ்தனிஸ்லாஸ் ஒளிப்பதிவும், அம்ரித் ரகுநாத்தின் இசையும் ரசிக்க வைக்கிறது. பல காட்சிகளை யூகிக்க முடிந்தாலும், அழுத்தமான திரைக்கதை பலம் சேர்க்கிறது. சொந்த வீடு என்ற கனவில் வாழும் நடுத்தர குடும்பத்தினரின் வலி-வேதனையை, உணர்வுப்பூர்வமான காட்சிகளை கொண்ட படமாக இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், ஸ்ரீகணேஷ்.
3 பி.எச்.கே. – உணர்வு