"3 பிஎச்கே" படக்குழுவை பாராட்டிய சிம்பு

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், ‘மிஸ் யூ’ படத்தை தொடர்ந்து ‘3 பிஎச்கே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சித்தார்த்தின் 40-வது படமாகும். இந்த படத்தை ‘8 தோட்டாக்கள், குருதி ஆட்டம்’ போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ளார்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது. மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களுக்கென சொந்தமாக ஒரு 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” ‘3 பிஎச்கே’ படத்தை பார்த்தேன். உணர்வுபூர்வமான பயணத்திற்கு உங்களை அழைத்து செல்லும் அழகான திரைப்படம். சித்தார்த் மற்றும் சரத்குமார் சிறப்பாக நடித்திருந்தனர். இயக்குநர் ஸ்ரீகணேஷ் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.