“Killer” movie: SJ Surya gushes about fans’ love

சென்னை,
தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு ”கில்லர்” எனப்பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி இணைந்திருக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. அதில், எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி அஸ்ரானி, கார்த்தி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘கில்லர்’ பட பூஜையின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வாலி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு ‘இசை’ படத்தை இயக்கி நடித்திருந்தார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனராவது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் அன்பு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “கில்லர் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் என் மீது அளவற்ற அன்பை பொழிந்த அன்பும் ஆருயிருமான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. என்ன தவம் செய்தேன் இந்த அன்பு கிடைப்பதற்கு. ‘கில்லர்’ திரைப்படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும்!” என்று பதிவிட்டுள்ளார்.