நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்|Actor Krishna files bail application

சென்னை,
கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீசார் கடந்த 23-ம் தேதி கைது செய்தனர். விசாரணையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிர்வாகி பிரசாத், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிரதீப்குமார் ஆகியோர் மூலமாக கொகைன் போதைப் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது. மேலும், இந்தக் கும்பலுக்கும் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர் கேரளாவில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தார். மேலும், அவரது செல்போன் சுவிஸ்ட்ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, தனிப்படையினர் கிருஷ்ணாவை தேடி கேரளாவிற்கு சென்றனர். இந்நிலையில், அவர் தனது வக்கீல்களுடன் நுங்கம்பாக்கம் போலீசார் முன் கடந்த 25-ம் தேதி நண்பகல் ஆஜரானார். போலீசார் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர். இதில், தனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது, தான் ஏற்கெனவே இதய நோயாலும், இரைப்பை பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருப்பதால் போதைப் பொருள் உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும், பிரசாத்துக்கும் தனக்கும் நேரடியான தொடர்பு கிடையாது என்றும் கூறியுள்ளார். மேலும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருடன் உள்ள உரையாடல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாத கைதாகி, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிருஷ்ணாவை ஜூலை 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தநிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை. போதைப்பொருளை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் மருத்துவ அறிக்கையில் இல்லை என்று நடிகர் கிருஷ்ணா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.