ரகுவரனின் இறப்புக்கு அதுதான் காரணம் – நடிகர் பப்லு

சென்னை,
தமிழ் சினிமாவின் வில்லன்கள் வரிசையில், நடிகர் ரகுவரனின் பெயர் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். வில்லன் மட்டுமின்றி, குணச்சித்திர வேடங்களிலும் தனித்துவமான நடிப்பை வழங்கியவர். இவர் 2008-ம் ஆண்டு தன்னுடைய 49-வது வயதில் இறந்தார். அவரது இந்த திடீர் மரணம், திரைத் துறையினர் மத்தியிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதே அவரது இறப்பு குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் நடிகர் பப்லு என்ற பிரித்விராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரகுவரன் பற்றி பேசியிருக்கிறார். அதில், ”சென்னை திரைப்படக் கல்லூரியில் எனக்கு சீனியராக இருந்தவர், ரகுவரன். அங்குதான் எங்களுடைய நட்பு ஆரம்பமானது. இருவரும் பல விஷயங்களில் ஒரே மாதிரிதான் இருப்போம்.
ரகுவரன் ஒரு கட்டத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானார். அதை தொடர்ந்து பயன்படுத்தியதால் அவரது மூளையில் இருக்கும் நினைவுப் பகுதி செயல் இழந்துபோனதுதான் அவரது இறப்புக்கு காரணம். அவர் போதைக்கு அடிமைப்பட்டிருந்த நேரத்தில், நான் அவரைத் திருத்துவதற்காக பல முயற்சிகளை செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவர், ‘உன்னுடைய வேலை எதுவோ, அதை மட்டும் பார்’ என்று சொல்லிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.