’தக் லைப்’ தியேட்டர் முன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது: கன்னட அமைப்புகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

’தக் லைப்’ தியேட்டர் முன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது: கன்னட அமைப்புகளுக்கு போலீஸ் எச்சரிக்கை



பெங்களூரு,

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ படம் கடந்த 5-ந் தேதி கர்நாடகம் தவிர்த்து உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் (மே) 24-ந் தேதி சென்னையில் நடந்திருந்தது. அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து தமிழிலில் இருந்து தான் உங்களது மொழி (கன்னட மொழி) பிறந்தது என்று கூறினார்.

தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்ததாக கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல்ஹாசனுக்கு எதிராகவும், அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் ‘தக் லைப்’ படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கன்னட திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.

ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டதால், கர்நாடகத்தில் கடந்த 5-ந்தேதி தக் லைப் படம் வெளியாகவில்லை. இதனை எதிர்த்து கர்நாடகத்தை சேர்ந்த மகேஸ்ரெட்டி என்பவர் சுப்ரீம் கோா்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகத்தில் தக்லைப் படத்தை திரையிட அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதனால் கர்நாடகத்தில் தக்லைப் படத்தை திரையிடும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு முன்பு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், ‘தக் லைப்’ படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு தீவைப்போம், கல்வீசி தாக்குதல் நடத்துவோம் என்று கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். தற்போது சுப்ரீம் கோர்ட்டே அனுமதி வழங்கி இருப்பதால், தக் லைப் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் முன்வந்துள்ளனர்.

குறிப்பாக பெங்களூருவில் ‘தக் லைப்’ படம் திரையிடப்பட்டால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இதற்காக கன்னட அமைப்புகளின் தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். முதற்கட்டமாக கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவரான பிரவீன் ஷெட்டிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

அதாவது பெங்களூருவில் தக்லைப் படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை. பெங்களூரு சுதந்திர பூங்காவில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி உள்ளது. சட்டத்திற்கு எதிராக வேறு எங்கும் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கைகள் தேவையானது என்றும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பிரவீன் ஷெட்டியை சந்தித்து போலீசார் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்த போது, அதனை வாங்க அவர் மறுத்து விட்டார். இதையடுத்து, பெங்களூருவில் உள்ள அவரது வீட்டு முன்பாக போலீசார் நோட்டீஸ் ஒட்டி வைத்துள்ளனர். இதற்கு பிரவீன் ஷெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘தக் லைப்’ படம் திரையிடப்படும் தியேட்டருக்கு யாராவது தீவைத்தாலோ, கல்வீசி தாக்குதல் நடத்தினாலோ நான் பொறுப்பு ஏற்க முடியுமா? என்று பிரவீன் ஷெட்டி கூறியுள்ளார்.

மேலும் கரவே நாராயண கவுடா உள்பட கன்னட அமைப்புகளின் தலைவர்கள், பிரமுகர்களுக்கும் போலீசார் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகிறார்கள். பிரவீன் ஷெட்டி தான் தக்லைப் படம் வெளியாகும் தியேட்டருக்கு தீவைப்போம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *