அந்த சவாலுக்கு நான் தயாராக இருக்கிறேன் – நடிகர் காளி வெங்கட் | I am ready for that challenge

சென்னை,
தமிழ் சினிமாவில் யதார்த்த நடிப்பால் கவனம் ஈர்த்து வருபவர் நடிகர் காளி வெங்கட். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘மெட்ராஸ் மேட்னி’ என்ற படம் வெளியானது. கார்த்திகேயன் மணி இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.
அந்த விழாவில் நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “சத்யராஜ், ரோஷிணி, ஷெல்லி ஆகியோருடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக எடுக்க இங்கு யாரும் முன்வருவது கிடையாது. எதார்த்த படங்கள் அதிகமாக எடுக்கப்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் மலையாள படங்களை பாருங்கள் என்று அடிக்கடி நம்மை வெறுப்பேற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்தது கிடையாது. எந்த கதாபாத்திரம் என்றாலும், அதற்கு உண்மையாக நடிக்க வேண்டும். ஹீரோ என்ற நிலையில் நான் இல்லை. அந்த பாதையில் என் பயணமும் இல்லை.
முத்தக்காட்சி, ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதில்லையே… என்றெல்லாம் என்னை கேட்கிறார்கள். இந்த சிந்தனை இயக்குனர்களுக்கு வராமல் நான் என்ன செய்ய முடியும்?. ரொமான்ஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க எனக்கும் ஆசை இருக்கிறது. 250 பேருக்கு முன்பு இருவரிடையே நடக்கும் ‘ரொமான்ஸ்’ என்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்த சவாலை செய்ய நானும் தயாராகவே இருக்கிறேன்”, என்றார்.