''கண்ணப்பாவாகவே வாழ்ந்தார்'' – விஷ்ணு மஞ்சுவை பாராட்டிய பாலிவுட் நட்சத்திரம்

சென்னை,
பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான மஞ்சு விஷ்ணு, தற்போது கண்ணப்பா படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும், பிரபாஸ், மலையாள நடிகர் மோகன்லால், முன்னணி பாலிவுட் நடிகர் அக்சய் குமார், நட்சத்திர நாயகி காஜல் அகர்வால் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் வருகிற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனின்போது கண்ணப்பாவில் சிவனாக நடித்திருக்கும் அக்சய் குமார், விஷ்ணு மஞ்சுவை பாராட்டினார். அவர் கூறுகையில்,
“விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பாவாகவே வாழ்ந்தார். அவர் என்னிடம் ஒரு குறிப்பிட்ட காட்சியை விளக்க கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் செலவிட்டார். ஆனால், திரையில் அது ஆறு அல்லது ஏழு நிமிடங்கள் மட்டுமே வரும். இருந்தாலும், அவர் அதை எனக்கு விரிவாக விளக்கினார்.
நான் ஆரம்பத்திலே அதை புரிந்துகொண்டேன், ஆனாலும் அவர் தொடர்ந்து விளக்கினார். ஏனென்றால் அவர் அவ்வளவு காதல் கொண்டிருக்கிறார். ஒரு நடிகர் ஒரு பாத்திரத்தில் தன்னை இவ்வளவு ஈடுபடுத்திக் கொள்வதை அரிதாகவே பார்க்க முடியும்” என்றார்.