"டூரிஸ்ட் பேமிலி" இயக்குநரை நேரில் சந்தித்து வாழ்த்திய நானி

சென்னை,
அயோத்தி, கருடன், நந்தன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை அடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் பேமலி’. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது.சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஜன் ஜீவிந்த், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்படம் 4வது வாரத்தில் வெற்றிநடைபோட்டு வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் இப்படம் இன்றுவரையிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமலி’ திரைப்படம் ஜப்பானிலும் வெளியானது. இத்திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.86 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 2 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.
ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜமவுலி, சூர்யா, நானி ஆகியோரை தொடர்ந்து நடிகர் கிச்சா சுதீப்பும் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார்.
டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்த நடிகர் சூர்யா, இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்தை நேரில் சந்தித்து பாராட்டினார். அந்த வகையில் தற்பொழுது நடிகர் நானி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
நானியை சந்தித்தது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் “நானி சார் உங்களை சந்தித்தது மிகவும் கவுரமானது. நீங்கள் மிகவும் தன்னடக்கமான மனிதர். நீங்கள் படத்தைப் பற்றி நுணுக்கமாக பேசியது என்னை கூடுதல் சிறப்பானவனாக உணர வைத்தது. நன்றி” என பதிவிட்டுள்ளார்.