கொல்லங்குடி கருப்பாயி மறைவு; டி.டி.வி. தினகரன் இரங்கல்

கொல்லங்குடி கருப்பாயி மறைவு; டி.டி.வி. தினகரன் இரங்கல்


கோப்புப்படம்

சிவகங்கை,

தமிழ் சினிமாவில் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ‘ஆண் பாவம்’ படத்தில் விகே ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி. மதுரை-தொண்டி சாலை, சிவகங்கை கொல்லங்குடி உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரை ஆண் பாவம் படத்தின் மூலம் பாண்டியராஜன் தான் அறிமுகப்படுத்தினார்.

நாட்டுப்புற பாடகியான இவர், கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார். வயல் வெளியில் ஒலித்த கிராமிய பாட்டு அகில இந்திய வானொலி வாயிலாக ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஒலித்தது.

ஆண் பாவம் படத்திற்கு பின் கோபாலா கோபாலா, ஆயிசு நூறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கினார். பாடல் ஒலிப்பதிவிற்கு சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் ஒடுங்கிப்போனார்.

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் இருந்த கொல்லங்குடி கருப்பாயி வயது முதிர்வின் காரணமாக இன்று காலமானார். இவருக்கு வயது 99. மேலும் இவரது மறைவுக்கு தற்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், கொல்லங்குடி கருப்பாயி மறைவுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, நாட்டுப்புற பாடலுக்காகவும் தனது நடிப்பாற்றலுக்காகவும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற கொல்லங்குடி கருப்பாயி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

கொல்லங்குடி கருப்பாயி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *