தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

பெங்களூரு,
துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வந்ததாக கன்னட நடிகை ரன்யா ராவை கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கம் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது ரன்யா ராவ் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ரன்யா ராவிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
இந்தநிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரன்யா ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மனுதாக்கல் செய்திருந்தனர். கோர்ட்டு 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
இதையடுத்து நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் ரன்யா ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை(வெள்ளிக்கிழமை) வரை இந்த விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதில் கிடைக்கும் தகவல்களை வைத்து ரன்யா ராவ் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.