”பரியேறும் பெருமாள்” படத்தை அவரை வைத்துதான் எடுக்க விரும்பினேன்

சென்னை,
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ், நேற்று நடந்த ஒரு பட விழாவில் அதர்வாவை வைத்து ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்க விரும்பியதாக கூறினார்.
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ள ”டிஎன்ஏ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாரி செல்வராஜ் கலந்துகொண்டார்.
அவ்விழாவில் அவர் பேசுகையில், “அதர்வாவுக்கு இது நியாபகம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ”பரியேறும் பெருமாள்” படத்தின் ஸ்கிரிப்டை நான் முதலில் சொன்ன ஹீரோ அதர்வாதான். நான் அவரைச் சந்தித்து ஸ்கிரிப்டை சொன்னேன். ஆனால் அவரது பிஸியான ஷெட்யூல் காரணமாக, இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதர்வா இந்தப் படத்தில் நடிக்கமாட்டார் என்று தெரிந்ததும் நான் மிகவும் வருத்தப்பட்டேன்,” என்றார்.
‘டி.என்.ஏ’ படம் வரும் 20-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் முக்கிய அம்சம் என்னவெனில் இதில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும் 5 வெவ்வேறு இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.