The father who laughed and talked in the night was not seen alive in the morning – Shine Tom Shacko | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை

அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சிக்கினார். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அந்த செய்தியின் மூலம் மலையாள திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு குறித்த அதிர்ச்சிகர செய்திகள் வெளியானது.
ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தோடு காரில் பெங்களூரு நோக்கி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பாறையூர் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த அவரது தந்தை சி.பி சாக்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த ஷைன் டாம் சாக்கோ, தர்மபுரி அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை எடுத்துவிட்டு, இப்போது கேரளாவிலுள்ள திருச்சூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஷைன் டாம் சாக்கோவை மத்திய மந்திரியும் நடிகருமான சுரேஷ் கோபி நேற்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். நாளை ஷைன் டாம் சாக்கோவின் தந்தை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் திரையுலகினர் பலரும் ஷைன் டாம் சாக்கோவிற்கும், அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஷைன் டாம் சாக்கோவிற்கு வலது கையில் பலத்த அடிபட்டுள்ளது என்றும் இன்னும் சில தினங்களில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்று வரும் ஷைன் டாம் சாக்கோ விபத்து குறித்து கூறும்போது, “இரவு முழுவதும் என் தந்தை ஜோக் அடித்து எங்களுடன் பேசிக் கொண்டு வந்தார் வழியில் ஆலப்புழாவில் நிறுத்தி இரவு உணவு சாப்பிட்டோம் அதன்பிறகு மாத்திரை போட்டுவிட்டு கொஞ்ச நேரம் நான் தூங்கி விட்டேன் காலையில் விபத்து நடந்த போதுதான் எனக்கு விழிப்பு வந்தது ஆனால் என்ன நடந்தது என்று உணர்ந்து நான் பார்க்கும் போது, என் தந்தை அங்கே உயிருடன் இல்லை” என்று கண்கலங்க பேசியுள்ளார்.