I don’t want Hindi cinema… Tamil is my home – Simran | இந்தி சினிமா எனக்கு வேண்டாம்… தமிழ்தான் என் வீடு

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த சிம்ரன், தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். பாலச்சந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம், மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால், ராக்கெட்ரி ஆகிய படங்களில் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்போது வரைக்கும் நடிகர் விஜய்க்கு சமமாக நடனம் ஆடிய ஒரே நடிகை என்ற பாராட்டைப் பெற்றவரும் அவர்தான். நடிகை சிம்ரன் திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
நாயகியாக அல்லாமல் நல்ல கதைகளில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். . தற்போது, நடிகர் சசிகுமாருடன் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்திலும் நடித்து கவனம் பெற்றுள்ளார். லோகேஷ் குமார் இயக்கி வரும் ‘தி லாஸ்ட் ஒன்’ படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சிம்ரன், “தனது வாழ்க்கைப் பயணம், தமிழ் திரையுலகம் மீதான பாசம் மற்றும் இந்தி சினிமாவில் வாய்ப்புகள் இருந்தும் ஏன் நடிக்கணும் என்று தோணல..” என்பன குறித்து மிக நேர்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் பேசியுள்ளார்.
சிம்ரன் கூறியதாவது,”நான் தமிழில் இருந்து இந்திக்கு போய் வேலை பண்ணனும் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. தமிழில் நடிப்பது எனக்கு செளகர்யமாக இருக்கு. இது எங்க வீடு மாதிரி இருக்கு. எல்லாம் இயல்பா நடக்குது. தமிழில் வேலை செய்யும் மனிதர்கள் எல்லாரும் ரொம்ப சிம்பிள். பெரிய ஸ்டார் ஆக இருந்தாலும் கூட, சினிமா துறையில் உள்ள மனிதர்கள் மிகுந்த மனப்பான்மையோடு நடந்துகொள்கிறார்கள். அதுதான் எனக்கு பிடிக்கிற விஷயம்.” எனவும் தெரிவித்திருந்தார்.
சிம்ரனுக்குப் பல இந்தி பட வாய்ப்புகள் வந்திருந்தன. ஹீரோயினாக, மற்றும் முக்கியமான துணைவேடங்களாக பணியாற்றும் வாய்ப்புகள் இருந்தாலும், சிம்ரன் தன்னுடைய பயணத்தை தமிழில் மட்டுமே தொடர விரும்பினார்.