தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரவி மோகனின் விவாகரத்து செய்தி வெளியாகி அவரைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்போது அவர் கைவசம் ஜீனி, கராத்தே பாபு மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் உள்ளன. இதில் ஜீனி படம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளராகக் களமிறங்கவுள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல்படமாக ‘டிக்கிலோனா’ மற்றும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ரவி மோகன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘ஜெயம் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரை வைத்துள்ளார். இதற்கான லோகோவை வெளியிட்டு, தான் தயாரிக்கும் படங்கள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில்தான் அவர் தன்னுடைய பெயரை ‘ஜெயம் ரவி’ என்பதில் இருந்து ‘ரவி மோகன்’ என்று மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.