கர்மாவும் கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கட்டும் – பாடகி சின்மயி

சென்னை,
மணிரத்னம் இயக்கத்தில் கமல் , சிம்பு , திரிஷா , அபிராமி , அசோக் செல்வன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ள படம் ‘தக் லைப்’. ஜூன் 5 ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ரகுமான் இசையில் 8 பாடல்கள் ‘தக் லைப்’ படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த 8 பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக ‘முத்த மழை’ மற்றும் ‘அஞ்சு வண்ண பூவே’ ஆகிய இரு பாடல்கள். இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை இந்தி மற்றும் தெலுங்கில் சின்மயி பாடியிருக்கிறார். தமிழில் தீ இந்த பாடலை பாடியுள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில் சின்மயி இந்த பாடலை பாடினார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ரகுமான் இசையையும் சின்மயி இதை பாடியிருக்கும் விதத்தையும் பாராட்டி வருகிறார். தீ பாடியதை விட பெரும்பாலான ரசிகர்கள் சின்மயி குரலை அதிகம் விரும்புகிறார்கள். ‘இப்படிபட்ட குரலையா பாடவிடாமல் தடை விதித்திருக்கிறார்கள்’ என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ரசிகர்களின் வரவேற்பைத் தொடர்ந்து தற்போது ஆடியோ லாஞ்சில் சின்மயி பாடிய காணொளி யூடியூபில் வெளியானது.
திரைப்படத்தில் தெலுங்கு, ஹிந்தியில் சின்மயியும் தமிழ் மொழியில் பாடகி தீயும் பாடியிருந்தனர். தீ பாடியது ரசிகர்களிடம் போதிய கவனத்தைப் பெறவில்லை. இதனால், தமிழிலும் சின்மயியை பாட வையுங்கள் எனப் படக்குழுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். வாட்ஸப் ஸ்டேட்டஸில் தொடங்கி சோஷியல் மீடியா முழுவதும் சின்மயியை கொண்டாடி வருகின்றனர்.
“இன்னும் 15 ஆண்டுகளில் பாடகி தீ, 100 சின்மயி மற்றும் 100 ஸ்ரேயா கோஷலை தாண்டி செல்வார்” என சின்மயி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இந்நிலையில் சின்மயி முகநூல் பக்கத்தில், “கடந்த சில வருடங்களாக நான் அனுபவித்த மோசமான வார்த்தைகள், அவமானங்கள், துன்புறுத்தல்கள், பொய்யர், விபச்சாரி, அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொண்ட பெண் என்றப் பல விமர்சனங்களை எதிர்கொண்டேன். அது எல்லாவற்றையும் ஒரே மூலமான கடவுளுக்கே அர்ப்பணிக்கிறேன். தற்போது நான் பெற்றுவரும் ஆதரவுகளையும், பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கான ஆதரவையும் ஒரே மூலமான கடவுளுக்கே அர்ப்பணிக்கிறேன். கர்மாவும் கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பதிலடி கொடுக்கட்டும். இந்தக குற்றச்சாட்டுகளை எதிரக்கொண்டு தப்பிப் பிழைத்த அனைவருக்கும் இப்போது எனக்குக் கிடைக்கும் ஆதரவைப் பெறட்டும். உண்மை வெல்லட்டும்.” என குறிப்பிட்டிருக்கிறார். தற்போது சின்மயி தொடர்பான மீடூ விவாகரங்களும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.