தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி குறைப்பு; திரைப்படத்துறையினர் வரவேற்பு

சென்னை,
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்கள் திரைக்கு வருகிறது. இந்த படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த இந்த கேளிக்கை வரை மிகவும் அதிகமாக உள்ளதாகவும் எனவே கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்று திரைப்பட துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் இந்த கேளிக்கை வரியால் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் திரைப்படத் துறையினர் தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாக இந்த வரியை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு திரைப்படத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரைப்படத்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.