கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தையால் நானி நெகிழ்ச்சி

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘ஹிட் 3’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘ஹிட் 3’ பட புரோமோஷன் நிகழ்ச்சியின்போது நானி “விருமாண்டி திரைப்படத்தில் அந்த கோர்ட் சீனின் போது அவர் தூங்கி கொண்டு இருப்பார். அவரை தட்டி எழுப்புவார்கள். அப்பொழுது அவர் உண்மையில் தூங்கி எழுபவர் எப்படி செய்வார்களோ அதே முக பாவனைகளை செய்வார். நான் அந்த வீடியோ கிளிப்பை ஒரு 100 தடவை மேல் பார்த்திருப்பேன். அதை இன்ஸ்பைர் செய்துதான் ‘ஹாய் நான்னா’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்தேன். அவர் யாரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகுகிறார் என ஆவல் அதிகம் இருக்கிறது” என கூறினார்.
தற்போது ‘தக் லைப்’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியி கமல் பேட்டியளித்துள்ளார். அதில் “மற்ற நடிகர்கள் உங்களுடைய குறிப்பிட்ட காட்சியைப் பின்பற்றி நடித்ததைக் குறித்து பேசும் போது எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்” என்ற கேள்வி கமலிடம் எழுப்பப்பட்டது. அதற்கு கமல் “நானி சமீபத்தில் சொல்லியிருந்தார். நானி பெயரை ஏன் குறிப்பிட்டேன் என்றால் சினிமா என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். நன்றி நானி என்று சொல்வதை விட நானி என்று குறிப்பிட்டதே பெரியது. அது மாதிரி தான் நடிப்பும் இருக்க வேண்டும். நான் மனதில் என்ன நினைக்கிறேன் என்பதை ரசிகர்கள் புரிந்துக் கொள்வார்கள்” என்று பதிலளித்துள்ளார்.
இதற்கு நானி அவரது எக்ஸ் தளத்தில் “போதும் சார்.. போதும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். நடிகர் நானி ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தை பாராட்டி எக்ஸ் தளத்தில் சமீபத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.