நடிகர் ராஜேஷின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை,
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ் (வயது 75). இவர் 1974-ம் ஆண்டு வெளியான ‘அவள் ஒரு தொடர் கதை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதிச்ச ராஜேஷ் இதுவரை ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் கடைசியாக ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராஜேஷ் உயிர்ழந்தார். ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின் திடீர் மறைவுக்கு தமிழ் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் ராஜேஷின் மறைவு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.