கியாரா அத்வானியின் பிகினி புகைப்படத்தை பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிய ராம் கோபால் வர்மா

மும்பை,
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவான ‘கேம்சேஞ்சர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கியாரா அத்வானி. இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் அவர், அயன்முகர்ஜி இயக்கில் உருவாகி உள்ள ‘வார் 2’ படத்தில் ஹிருதிக்ரோஷன், ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிக்கிறார். ஜுனியர் என்.டி.ஆர் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் டீசர் வெளியானது.
அந்த டீசரில் இதுவரை இல்லாத அளவிற்கு கியாரா அத்வானி பிகினி உடையில் கவர்ச்சியாக தோற்றமளித்துள்ளார். டீசரை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த கியாரா அத்வானி, “இப்படத்தின் மூலம் எனக்கு முதன்முறையாக நடந்த பல விஷயங்கள் உண்டு. முதல் அதிரடி படத்தில் நடித்தது, ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்.டி,ஆருடன் முதன் முறையாக நடித்தது, முதல் முறையாக பிகினி உடையில் நடித்தது” என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கியாரா அத்வானியின் பிகினி புகைப்படத்தை இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் அந்த பதிவில் கியாரா அத்வானி குறித்து ஆபாசமான கருத்தையும் அவர் பதிவிட்டதாக தெரிகிறது. இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பொதுவெளியில் இவ்வாறு நடந்து கொள்ளும் இவர், தனிப்பட்ட முறையில் எவ்வளவு மோசமான நபராக இருப்பார் என கடுமையாக விமர்சித்தனர். இதைத் தொடர்ந்து ராம் கோபால் வர்மா தனது பதிவை நீக்கினார். இருப்பினும் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.