மீண்டும் இணையும் வடிவேலு-பார்த்திபன் கூட்டணி

சென்னை,
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு பலருடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் நடித்தாலும் பார்த்திபனுடன் சேர்ந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும். பார்த்திபனிடம் சிக்கி கொண்டு வடிவேலு படாதபாடுபடும் காட்சிகளில் ரசிகர்களே அவரை நினைத்து பரிதாபப்படும் வகையில் காட்சிகள் அமையும்.
‘வெற்றிக் கொடி கட்டு’ படத்தில் துபாய் ரிட்டனாக வந்திறங்கிய வடிவேலை பார்த்து துபாய்ல கக்கூஸ் கழுவுற வேலை தானே பார்த்த என்று பார்த்திபன் கேட்கும் காட்சிகள் இன்றும் கிராமப்புற டீக்கடை வரை பார்த்து ரசிக்கும் நகைச்சுவை காட்சிகள். அந்தளவுக்கு வடிவேலை வச்சி செய்வார் பார்த்திபன், இது போன்று ‘பாரதிகண்ணம்மா’ படத்தில் ஏம்பா பாரதி உன் கைய காலாக நினைச்சு கேக்கிறேன், இப்படி குண்டக்க மண்டக்க பேசுனா எப்படி, ஒரு குத்து மதிப்பா சொல்றது தப்பா என்று கேட்கும் வடிவேலிடம் பார்த்திபன் எதிர்கேள்வி கேட்டு மடக்கும் காட்சிகளில் இருவரின் நகைச்சுவை நையாண்டி படத்துக்கு பெரிய பலமாக அமைந்து வந்தது.
இந்நிலையில் திடீரென வடிவேலுக்கு படவாய்ப்பு குறைந்து சினிமா நடிப்பில் இடைவெளி ஏற்பட்டது. மீண்டும் தற்போது படங்களில் நடித்து வரும் வடிவேலும், பார்த்திபனும் நேற்று சந்தித்துள்ளனர். இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர். இருவரும் சந்தித்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து பார்த்திபன் வெளியிட்ட பதிவில், நகைச்சுவையில் மட்டுமல்ல நடிப்பிலும் ஈடில்லாதவர். சந்தித்தோம் இன்று. விரைவில் படம் வெளியாகும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.