அவருடன் இணைந்து நடிப்பதே எனக்கு பெருமை – தனுஷ்

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், ‘ராயன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில் நடிகர் நாகார்ஜுனா குறித்து தனுஷ் மனம் திறந்து பேசியுள்ளார். தனுஷ் கூறும்போது, ”நாகார்ஜுனா போன்ற லெஜண்டுகளின் நடிப்பை பார்த்து பிரமித்து போயுள்ளேன். அவர் நடித்த படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன.
தமிழில் அவர் நடித்த ‘ரட்சகன்’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நடிகருடன் நான் இணைந்து நடிப்பதே எனக்கு பெருமை. படப்பிடிப்பில் அவரிடம் இருந்து கற்ற விஷயங்கள் நிறைய உண்டு. அவற்றை நிச்சயம் நானும் பின்பற்றுவேன்.
மேலும் படத்தின் டீசருக்கு ரசிகர்கள் காட்டிய வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் என் நெஞ்சுக்கு நிறைவானவர்கள். ரசிகர்களை மகிழ்விப்பதே என் கடமையாக இருக்கிறது. அதை தொடர்ந்து செய்வேன்”, என்று கூறியுள்ளார்.