யோகி பாபுவின் ‘ஸ்கூல்’ படம் எப்படி இருக்கிறது? – விமர்சனம் | How is Yogi Babu’s ‘School’ movie?

சென்னை,
தனியார் பள்ளி தலைமை ஆசிரியரான பகவதி பெருமாள், தனது பள்ளியை 2-ம் இடத்தில் இருந்து முதலிடத்துக்கு கொண்டுவர துடிக்கிறார். மாணவர்களை உற்சாகப்படுத்த ஒரு புத்தகம் எழுதுகிறார். இந்த புத்தகம் மாணவர்களிடையே எதிர்மறையான சிந்தனைகளை தூண்டிவிடுகிறது. அதனைத்தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் சிலர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள். கண்ணுக்கு தெரியாத அமானுஷ்ய சக்திதான் இதற்கெல்லாம் காரணம் என்று நம்புகிறார்கள். இதற்காக சாமியாரும் வரவழைக்கப்படுகிறார்.
குழப்பமான இச்சூழலில் முன்னாள் ஆசிரியர்களான யோகிபாபுவும், பூமிகாவும் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்கள் வருகைக்கு பின்னர் அமானுஷ்ய சம்பவங்கள் அடங்கி போகின்றன. மாணவர்கள், ஆசிரியர்களின் மரணங்கள் நிகழ்வது ஏன்? இதன் பின்னணியில் நிலவும் அமானுஷ்யம் தான் என்ன? என்பதற்கான பதில்களே மீதி கதை.
காமெடியில் கலக்கும் யோகிபாபு, ஆசிரியர் கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். அவரது குணச்சித்ர நடிப்பு கவனம் ஈர்க்கிறது. அறிவுரை தரும் ஆசிரியராக வரும் பூமிகா அழகு சேர்க்கிறார். அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக கே.எஸ்.ரவிக்குமார், தலைமை ஆசிரியராக பகவதி பெருமாள், உதவி தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் சாம்ஸ், மந்திரவாதியாக நிழல்கள் ரவி, சாமியாராக ஆர்.கே.வித்யாதரன் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கின்றன.
ஆதித்யா கோவிந்தராஜின் ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் படத்துடன் ஒன்ற செய்கின்றன. திருப்பங்கள் கொண்ட பரபரப்பான காட்சிகள் பலம். வகுப்பறை காட்சிகள் இல்லாதது, பக்கம் பக்கமாக அறிவுரைகள் பேசியிருப்பது பலவீனம்.
மாணவர்கள் வெற்றி – தோல்வியை எண்ணாமல், வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொண்டு பயணித்தால் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை விதையை தூவும் பாடமாக படத்தை இயக்கியுள்ளார், ஆர்.கே.வித்யாதரன்.
ஸ்கூல் – அறிவுரை.